குஜராத் அரசியலில் புதிய திருப்பம்.. பா.ஜ.க.விலிருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்?

 
ஜெய்நாராயண் வியாஸ்

குஜராத்தில் பா.ஜ.க.விலிருந்து விலகிய அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தகவல்.

குஜராத் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் மொத்தம் 2 கட்டங்களாக (டிசம்பர் 1 மற்றும் 5) நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத சூழலில், குஜராத்தின் முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெய்நாராயண் வியாஸ் நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் பா.ஜ.க.விலிருந்து விலகினார். இது ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

சி.ஆர்.பாட்டீல்

ஜெய்நாராயண் வியாஸ், குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், கடந்த 30 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் சித்தாந்தத்தின்படி தீவிரமாக பணியாற்றி வருகிறேன். இன்று தனிப்பட்ட காரணங்களுக்காக  கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தார். பா.ஜ.க.விலிருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரஸில் சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ்

குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் கூறுகையில், மாநிலத்தில் பா.ஜ.க.வை கட்டியெழுப்ப உதவிய ஜெய்நாராயண் வியாஸ் அந்த கட்சியால் புறக்கணிக்கப்படுகிறார். அவர் அண்மையில் சோனியா காந்தி மற்றும் அசோக் கெலாட் மற்றும் குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு சர்மா ஆகியோரை சந்தித்து பேசினார். அவர் (ஜெய்நாராயண் வியாஸ்) காங்கிரஸில் சேருவாரா இல்லையா என்பது குறித்து அவர் முடிவெடுக்கும் வரை காத்திருப்போம் என தெரிவித்தார்.