குஜராத் அரசியல் திடீர் திருப்பம்.. காங்கிரஸில் இணைந்த முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ்

 
காங்கிரஸில் இணைந்த ஜெய் நாராயண் வியாஸ்

குஜராத் முன்னாள் அமைச்சரும், அண்மையில் பா.ஜ.க.வில் இருந்து விலகியருவமான ஜெய் நாராயண் வியாஜ் நேற்று காங்கிரஸில் இணைந்தார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான ஜெய் நாராயண் வியாஸ் கடந்த 5ம் தேதியன்று பா.ஜ.க.வில் இருந்து விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து  விலகுவதாக 75 வயதான ஜெய் நாராயண் வியாஸ் தெரிவித்தார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அவரது அமைச்சரவையில் ஜெய் நாராயண் வியாஸ் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஜெய் நாராயண் வியாஸ் கட்சியில் இருந்து விலகியது பா.ஜ.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் சேருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்த சமீர் வியாஸ்

குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள  காங்கிரஸ் அலுவலகத்துக்கு நேற்று ஜெய் நாராயண் வியாஸ் தனது மகன் சமீர் வியாஸூடன் சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் முன்னிலையில் ஜெய் நாராயண் வியாஸூம், அவரது மகன் சமீர் வியாஸூம் அந்த கட்சியில் இணைந்தனர்.