கொளுத்திப்போட்ட பிடிஆர் - வெடிக்கும் திமுக

 
p

திமுகவின் தலைவரும்  முதல்வருமான மு. க. ஸ்டாலின்,  இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்து வரும் நிலையில்,  அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தீபாவளி வாழ்த்து சொன்னதற்கு  திமுகவுக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.  பிடிஆர் கொளுத்திப்போட்ட அந்த வெடி திமுகவில் பயங்கரமாக வெடிக்கிறது .

கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஓணம் பண்டிகைகளுக்கு தொடர்ந்து வாழ்த்து சொல்லி வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின்,  இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதை தவிர்த்து வருகிறார்.  விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை,  தீபாவளி  இந்துக்களின் பண்டிகைகளுக்கு அவர் வாழ்த்து சொல்வதே இல்லை.  ஒரு முதல்வர் இப்படி பாரபட்சமாக நடந்து கொள்ளலாமா என்று இந்துக்கள் அமைப்பினரும் பாஜகவினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  ஆனால் மு .க. ஸ்டாலின் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்.


அறிவியலுக்கு எதிராக இருக்கும் காரணத்தினால்,  பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரணத்தினால் இந்து பண்டிகைகளுக்கு நான் வாழ்த்து சொல்வதில்லை என்று திமுகவின் மூத்த நிர்வாகி ஆ. ராசாவும் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

 இந்துக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும் அவர்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக்கூடாதா? என்று பாஜகவினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 அமெரிக்க அதிபர் கூட வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுகிறார்.  ஆனால் நம் மாநிலத்தின் முதல்வர் இந்துக்களின் பண்டிகைக்கு எதிரானவராக இருக்கிறார் என்று பலரும் கருமையாக விமர்சித்து வந்தனர்.  அப்போதும் கூட முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது நிலையில் இருந்து மாறவே இல்லை.

 இந்த நிலையில் திடீர் பரபரப்பாக  தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,   ’இல்லங்களில் மகிழ்ச்சி ஒளிரட்டும் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டு இருந்தார் . முதல்வர் மு. க. ஸ்டாலின் படத்துடன்  மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் ஈ .வெ. ராமசாமி ஆகியோரின் படங்களையும் அச்சிட்டிருந்தார். 

 முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து சொல்லாமல் இருக்கும்போது அமைச்சர் பி. டி. ஆர் எப்படி வாழ்த்து சொல்லலாம் என்று திமுகவினர் சரவெடியாய் வெடித்து வருகின்றார்கள்.