ஆட்டம் காணும் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா.. கட்சியிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி.. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவும் தலைவர்கள்

 
வீர் சாவர்க்கர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது- உத்தவ் தாக்கரே பேச்சு

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா அணியில், தானே மாநகராட்சியின்  66 சிவ சேனா கவுன்சிலர்கள் இணைந்தனர். இது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா பிரிவுக்கு பெரிய அடியாக கருதப்படுகிறது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா தற்போது இரண்டு பிரிவுகளாக உள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பிரிவும், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவும் செயல்பட்டு வருகிறது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா அணியில் பல தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமுக்கு தாவி வருகின்றனர். மகாராஷ்டிராவின் தானே மாநகராட்சியில் 66 சிவ சேனா கவுன்சிலர்கள் நேற்று ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தனர்.

ஆனந்த்ராவ் விதோபா அட்சுல்

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மக்களவை தொகுதியின் முன்னாள் எம்.பி.யும்,  சிவ சேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆனந்த்ராவ் விதோபா அட்சுல் அந்த கட்சியிலிருந்து விலகினார். இது உத்தவ் தாக்கரேவுக்கு பெரிய அடியாக கருதப்படுகிறது. அமலாக்கத்துறையின் அழுத்தம் காரணமாக கட்சியிலிருந்து ஆனந்த்ராவ் விதோபா அட்சுல் விலகியுள்ளார் என சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

சஞ்சய் ரவுத்

இது தொடர்பாக சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆனந்த்ராவ் ராஜினாமா செய்து விட்டார், அவருக்கு எதிராக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருக்கிறது, அவருடைய வீட்டில் ரெய்டு நடந்தது என்று அறிந்தேன். இந்த அழுத்தம் காரணமாக அவர் கட்சியிலிருந்து விலகி இருக்கலாம். இத்தகைய அழுத்தம் பல தலைவர்கள் மீது உள்ளது என்று தெரிவித்தார்.