கைரேகை நிபுணர் அல்லது ஜோதிடரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

எதிர்காலத்தை மாற்ற தேவையான பலம் என்னிடம் உள்ளதால், கைரேகை நிபுணர் அல்லது ஜோதிடரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று எதிர்க்கட்சியின் கிண்டலுக்கு  மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒரு ஜோதிடரை சந்தித்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ் கிண்டல் செய்தது. ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்காலம் அவரது துணை முதல்வரான பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கைகளில் இருப்பதால் மூடநம்பிக்கை (ஜோதிடரை சந்தித்து ஆலோசனை கேட்பது) அவருக்கு உதவாது என தேசியவாத காங்கிரஸ் கிண்டலாக தெரிவித்து இருந்தது.

தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்கிரஸின் கிண்டலுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார். சதாரா மாவட்டத்தில் உள்ள கரட்டில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: எந்த ஜோதிடரிடமும் உன் உள்ளங்கையை காட்ட வேண்டிய அவசியமில்லை. உள்ளங்கையில் உள்ள கோடுகளை மாற்றுவதற்கு உங்கள் மணிக்கட்டில்  வலிமை இருக்க வேண்டும். அந்த வலிமையை பாலாசாகேப் தாக்கரே மற்றும் ஆனந்த் திகே ஆகியோர் எங்களுக்கு வழங்கினர்.

தேவேந்திர பட்னாவிஸ்

கடந்த ஜூன் 30ம் தேதியன்று  முழு நாடும் அந்த வலிமையை கண்டது. சத்ரபதி சிவாஜி மகாராஜை பழங்காலத்தின் இலட்சியவாதி என்று கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கூறியதை நான் ஏற்கவில்லை. சிவாஜி மகாராஜ் எங்கள் கடவுள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் சிவ சேனா தலைமைக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ.க.-ஏக்நாத் ஷிண்டே சிவ சேனா பிரிவு  கூட்டணி அரசு அமைந்தது.