பா.ஜ.க. எப்போதும் ஆட்சியை தேடி அலைவதில்லை... அயோத்தியில் ராமர் கோயில் பால் தாக்கரேவின் கனவு... ஏக்நாத் ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

பா.ஜ.க. எப்போதும் ஆட்சியை தேடி அலைவதில்லை என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பால் தாக்கரேவின் கனவு என்றும் மகாராஷ்டிரா முதல்வரும், கிளர்ச்சி சிவ சேனா பிரிவு தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னை முதல்வராக்கியதில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பெரிய மனதுடன் இருப்பதை காட்டியுள்ளனர். பா.ஜ.க. எப்போதும் ஆட்சியை தேடி அலைவதில்லை. டெல்லியில் அண்மையில் மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். அமித் ஷாவுடன் பேசி கொண்டிருந்தபோது, அமித் ஷா என்னிடம், பீகாரில் பா.ஜ.க.வை விட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் குறைவான எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்தபோதும் அவரை நாங்கள் முதல்வராக்கினோம். மகாராஷ்டிராவில் நாங்கள் (பா.ஜ.க.) உங்களுக்கு (சிவ சேனா) ஒரு வார்த்தை (சிவ சேனாவுக்கு முதல்வர் பதவி) கொடுத்திருந்தால், நாங்கள் ஏன்? அதனை திரும்ப பெற போகிறோம் என்று தெரிவித்தார். 

பா.ஜ.க.

மகாராஷ்டிரா மக்கள் அப்போதைய பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணிக்கு தெளிவான ஆணையை வழங்கினர். ஆனால் பின்னர் நிலைமை சரியாகவில்லை. உத்தவ் தாக்கரேவிடம் பிரச்சினைகள் குறித்து பல முறை விளக்கினேன், ஆனால் அது வீணானது. இதுபோன்ற சூழ்நிலையில், எதிர்காலத்தில் வாக்காளர்களை எதிர்க்கொள்ள முடியாது என்றும் நான் அவரிடம் கூறியுள்ளேன். நான் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக கடந்த ஜூனில் சிவ சேனா தலைமைக்கு எதிராக நான் கிளர்ச்சி செய்யவில்லை. நான் இன்னும் ஒரு சிவ சேனா ஆர்வலராக உணர்கிறேன். மாநிலம் முன்னேற வேண்டும், மக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முதல்வர் பதவிக்கு எனது பெயரை பட்னாவிஸ் அறிவித்தபோது, அது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் நாங்கள் இருவரும் அதை அறிந்தோம். இந்த ஏற்பாட்டில் பட்னாவிஸ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 

பால் தாக்கரே

எனக்கு ஈகோ இல்லை, எந்த வேலைக்கும் எனக்கு பெயர் தேவையில்லை, நான் முடிவுகளை வழங்க விரும்புகிறேன். பட்னாவிஸ் மற்றும் முதல்வராக இருந்த அவரது அனுபவத்தின் வழிகாட்டுதலை எப்போதும் பெற விரும்புகிறேன். பல தலைவர்கள் என்னுடன் மற்றும் பட்னாவிஸூடன் தொடர்பில் உள்ளனர், ஆனால் எங்களிடம் போதுமான எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் எங்களுக்கு யாரும் வேண்டாம். உண்மையில் 170 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர்.  சமீப காலத்தில் அயோத்திக்கு செல்லும் வாய்ப்பை ஏதோ சில காரணங்களால் தவறவிட்டர்களை என்னுடன் அழைத்து செல்ல வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பால் தாக்கரேவின் கனவு. இப்போது அது நிறைவேறி வருகிறது. ராமர் கோயில் கட்டுவது வெறும் கனவு என்றும், அது நிஜம் அல்ல என்றும் சில எதிர்பாளர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் அது இப்போது தவறு என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. கோயில் பணிகள்வேகமாக நடந்து வருகிறது, இது நல்ல அறிகுறி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.