பா.ஜ.க. மற்றும் சிவ சேனாவின் இயல்பான் கூட்டணியால் மட்டுமே மகாராஷ்டிராவை முன்னேற்ற முடியும்.. ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

பா.ஜ.க. மற்றும் சிவ சேனாவின் இயல்பான் கூட்டணியால் மட்டுமே மகாராஷ்டிராவை முன்னேற்ற முடியும் என்று அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூம் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது அரசு (சிவ சேனா-பா.ஜ.க.) தனது பதவி காலத்தை நிறைவு செய்யும், அடுத்த தேர்தலிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். மகாராஷ்டிராவில் வலுவான அரசு உள்ளது. எங்களிடம் 164 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்

முந்தைய மகா விகாஸ் அகாடி (சிவ சேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி) எங்கள் எம்.எல்.ஏ.க்களின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானது. ஆனால் அப்போது எங்களால் பேச முடியவில்லை, அதனால்தான் இந்த (உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சி, பா.ஜ.க.வுடன் கூட்டணி) நடவடிக்கையை எடுத்தோம். பா.ஜ.க. மற்றும் சிவ சேனாவின் இயல்பான் கூட்டணியால் மட்டுமே மகாராஷ்டிராவை முன்னேற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், முன்பு பா.ஜ.க. என்னை முதல்வராக்கியது, தற்போது கட்சியின் தேவைக்கேற்ப கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டுள்ளோம். ஏக்நாத் ஷிண்டே எங்கள் தலைவர் மற்றும் முதல்வர்., அவருக்கு கீழ் பணியாற்றுவோம். அநீதி நீக்கப்பட்டு எங்களின் இயற்கையான கூட்டணி புத்துயிர் பெற்றது என தெரிவித்தார்.