"என் தொகுதிய சிங்கப்பூர் மாறி மாத்திருக்கேன்".. பிரச்சாரத்தில் முதல்வரை வம்பிழுத்த எடப்பாடி!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இம்முறை திமுக மட்டுமே கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்கிறது. அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக என அனைத்து கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. இருப்பினும் அனைத்து கட்சியினரும் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரிக்கின்றனர். குறிப்பாக எடப்பாடி செல்லுமிடமெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினை மிக மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில் சேலத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "என்னுடைய எடப்பாடி நகரை சிங்கப்பூரை போல் நான் மாற்றி வைத்துள்ளேன். 2011ஆம் ஆண்டுக்கு முன்பாக எந்த வசதியும் இல்லாமல் இருந்த எடப்பாடி தொகுதி தமிழ்நாட்டிலேயே இன்று முன்மாதிரி தொகுதியாக திகழ்கிறது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூருக்கு எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அவர் தொகுதியில் 12 தெருக்களில் 8 நாட்களாக மழைநீர் வடியவில்லை.
இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்ற அவலம் ஏற்பட்டது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் என்னை பார்த்து பச்சை பொய் பேசுவதாக ஸ்டாலின் கூறுகிறார். தேர்தலுக்கு முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இப்போது திமுக பல்டி அடித்து வருகிறது. மக்களை கவரக்கூடிய வகையில் பேசுவதில் முதலமைச்சர் ஸ்டாலின் வல்லவர். அவ்வாறு பேசித்தான் ஆட்சியை பிடித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுறவு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசு கைவிரித்து விட்டது” என்றார்.