அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்கவுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள்- சர்ச்சை போஸ்டர்

 
poster

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்துகிறோம் என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை அதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ளனர்.

EPS or OPS? AIADMK still undecided on CM candidate, party chief - The Week

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தொடர்ந்து அதிமுகவின் தலைமை குறித்த பிரச்சினை அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் மீண்டும் அதிமுகவின் தலைமை குறித்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் சாலை மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரியகுளம் பகுதியில் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போஸ்டர் ஒட்டிய நபரான சுரேஷ் என்பவரை விசாரித்தபோது அவர் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதாகவும், தற்போது அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத சாதாரண ஒரு தொண்டனாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதிமுகவில் தலைமை குறித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.