யோவ்..அம்மாவே பாத்தாங்கய்யா... விட்ரு..நீ வெளியே போ...எடப்பாடியை விளாசும் புகழேந்தி
ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தும் அதை நிராகரித்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட முடியாது என்பதற்கு எடப்பாடி சொல்லும் காரணங்களில் ஒன்று, கருணாநிதியை ஓபிஎஸ் புகழ்ந்து பேசினார். ஸ்டாலினை ரவீந்திரநாத் சந்தித்து அவரது ஆட்சியை புகழ்ந்து பேசினார் என்பது. இன்னொன்று..ஒற்றைத்தலைமையை ஓபிஎஸ் ஏற்கவேண்டும் என்பதுதான்.
இதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
’’ ஓபிஎஸ் சட்டமன்றத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து பேசினார் என்று அவர் மீது குற்றம் சாட்டுகிறார். ஆனால் கருணாநிதி படத்திறப்பு விழாவின் போது வந்து 20 நிமிடம் பேசினீர்களே பழனிச்சாமி. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எல்லாம் சொன்னீர்களே...ஓ .பி. ரவீந்திரநாத் எம்பி முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து பேசியது பெரிய குற்றமாகச் சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஸ்டாலினை ரவீந்திரநாத் பார்த்தது அது ரொம்ப அசிங்கமாம். அதிமுகவில் இருப்பது ஒரே ஒரு எம்பி தான் அவர் போய் பார்த்து பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.
யோவ்..அம்மாவே பாத்தாங்கய்யா..அம்மாவே ஸ்டாலினை அழைத்து வரவேற்று பார்த்து பேசி அனுப்பினார். அதற்காக திமுகவுடன் கூட்டு என்று சொல்லி விடுவதா? நீங்கள்தான் திரை மறைவாக திமுகவினருடன் கூட்டு சேர்த்துக் கொண்டு கொடநாட்டு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக எந்தெந்த திமுகவினர்களோடு தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை ஒவ்வொன்றாக வெளியிடட்டுமா? வெளியிடாமல் விடமாட்டோம்’’ என்று எச்சரித்துள்ளார்.
அவர் மேலும், ‘’ 2663 பேரை மொத்தமாக பிடித்து வைத்துக் கொண்டு சர்க்கஸ் காட்டுகிறார் எடப்பாடி. பயாஸ்கோப் காட்டுகிறார் எடப்பாடி. இதற்காகத்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றைக்கே முடிவு செய்தார். பொதுக்குழு உறுப்பினர்களை, செயற்குழு உறுப்பினர்களை மொத்தமாக பர்ச்சேஸ் செய்து விடுவார்கள் என்பதை உணர்ந்ததால்தான், தொண்டர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.
ஓபிஎஸ் நல்ல மனதோடு எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று அழைத்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதை நிராகரித்தார். கட்சி தொண்டர்களும் நாட்டு மக்களும் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொண்டன் தலைவராவார்.. தொண்டன் முதல்வராவார்... என்றால் பழனிச்சாமி நீ விட்ரு.. வெளியே வந்துரு... வேற ஒரு ஆளை ஒற்றை தலைமைக்கு நியமனம் செய். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சாதாரண ஒரு தொண்டன் வரட்டும்..நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் . அவர் இதைச் செய்ய மாட்டார். ஏனென்றால் பதவி வெறியின் மொத்த உருவம் தான் எடப்பாடி பழனிச்சாமி. அம்மா வகித்திருந்த பொதுச்செயலாளர் பதவியை வகிக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம். அதற்கு பணமும் நீ அடித்த கொள்ளையும் உதவாது . சிறையில் இருந்து கட்சியை நீங்கள் நடத்த முடியாது. இதனால்தான் முதல்வரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டிருக்கிறோம் . கொடநாடு வழக்கை துரிதமாக செயல்படுத்துங்கள். ஜெயிலுக்கு போறவங்க ஜெயிலுக்கு போகட்டும் வெளியே இருக்கிறவங்க வெளியே இருக்கட்டும் என்று சொல்கிறார்’’என்கிறார் கடும் ஆவேசத்துடன்.