"மொட்ட தலையன் குட்டையில விழுந்தானாம் அந்த கதையில" - அதிமுகவை வறுத்தெடுத்த துரைமுருகன்!

தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. நேற்று வேட்புமனு பரிசீலனை தொடங்கியது. இறுதியில் 74 ஆயிரத்து 416 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தற்போது தேர்தல் பணிகள் முடிவடைந்திருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் நேற்று தெற்கு மாவட்ட திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்ட நிகழ்வு சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பேசினார். அப்போது அவர், "நீட் தேர்வு வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தோம்.
ஆளுநர் இதில் தவறு உள்ளது என திருப்பி அனுப்பி விட்டார். ஆளுநரின் வேலை மாநில அரசிடம் இருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்றுவதுதான். கிராமப்புற மக்கள் நீட் வேண்டாம் என கூறுவதாக ஆளுநர் கூறுகிறார். ஆட்சி பொறுப்பேற்று 9 மாதத்தில் டெல்லி பக்கம் ஒரு முறை தான் முதலமைச்சர் சென்றுள்ளார். டெல்லி நாடாளுமன்றத்தில் ஸ்டாலினை போல் ஒரு முதலமைச்சர் இல்லை என கூறுகின்றனர். இன்னும் பெரிய திட்டங்களை செயல்படுத்தவில்லை.
ஆட்சி பொறுப்பேற்றது முதல் மக்கள் உயிரை காப்பதே முதன்மை என செயல்பட்டு வருகிறோம். முதல்வர் கொரோனா வார்டுக்கு சென்று வந்த தைரியம் எவருக்கும் வராது. நான்கூட உரிமையுடன் முதல்வரை கடிந்து கொண்டேன். நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்தது போல் உள்ளது. நீட்டை ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை” என்றார்.