ரஜினி பேசுறது அவருக்கும் புரியல யாருக்கும் புரியல.. அவரை சீரியஷாக எடுத்துக்க வேண்டாம் - நக்கலடித்த வைகோ

 
vr

ரஜினி பேசுறது அவருக்கும் புரியல யாருக்கும் புரியல... அவரை எல்லாம் சீரியசாக எடுத்துக்க வேண்டாம் என்று கிண்டலடித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார்.   இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்தது.  அந்த சந்திப்புக்கு பின்னர் ரஜினியின் இல்லத்தின் முன்பாக செய்தியாளர்கள் குவிந்திருந்தனர்.  அவர்கள் ஆளுநருடனான சந்திப்பு குறித்து கேட்டபோது,  அவசர அவசரமாக பேசிவிட்டு வீட்டிற்குள் ஓடிவிட்டார். ரஜினியின் சந்திப்பும் அவரது பேச்சும் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

vo

இந்நிலையில், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆளுநருடனான ரஜினி சந்திப்பும், அது குறித்து அவர் பேசியது பற்றிய கேள்விக்கு,  ‘’ரஜினி பேசுறது அவருக்கும் புரியல யாருக்கும் புரியல.  ஒரு நாளைக்கு நான் அரசியலுக்கு வாரேன் என்று சொல்கிறார் . மறுநாள் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க சொல்லிவிட்டேன் என்கிறார்.  அப்புறம் எல்லாரையும் வரச் சொல்கிறார்.  தமிழ்நாடு முழுவதிலும் இருந்து எல்லாரும் வராங்க.  வந்த பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு பால்கனியிலிருந்து கையை காட்டி விட்டு போய்விடுகிறார்.   அவரை ஒரு சீரியஸாகவே எடுத்துக்க வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

ra

ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று ரஜினி சொன்னதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ரஜினியின் பேச்சை வைகோ நக்கலடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.