தமிழக பாஜக அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு கலைப்பு
அண்ணாமலை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையினால், தமிழக பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் அதன் உட்பிரிவுகள் அனைத்தும் மறு சீரமைப்பிற்காக கலைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழக பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் அதன் உட்பிரிவுகள் அனைத்தும் மறு சீரமைப்பிற்கு கலைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை மண்டல், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் கட்சி பணி செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த அறிவிப்பை, தமிழக பாஜக ஐடி விங் தலைவர் சிடி நிர்மல்குமார் வெளியிட்டிருக்கிறார்.
அண்மையில்தான் கட்சியில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் அதன் உட்பிரிவுகள் அனைத்தும் கூண்டோடு கலைக்கப்பட்டிருப்பதால் பாஜகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.