திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பணத்தை சூறையாடினர்... பா.ஜ.க. குற்றச்சாட்டு

 
திலிப் கோஷ்

மேற்கு வங்கத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பணத்தை சூறையாடினர் என்று பா.ஜ.க.வின் திலிப் கோஷ் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க மாநிலம் பர்பா பர்தமானில் உள்ள சக்திகரில் பா.ஜ.க. கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திலிப் கோஷ் பேசுகையில் கூறியதாவது: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள்பணத்தை சூறையாடினர். எதிர்வரும் கிராமப்புற தேர்தல்களில் மக்கள் தங்கள் தவறான செயல்களுக்கு பழிவாங்குவார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடந்த பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் நம்மை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. ஓட்டுகளை கொள்ளையடித்து வெற்றி பெற்றனர். 

திரிணாமுல் காங்கிரஸ்

தற்போது, பொதுமக்களின் கோபத்தால் தலைமறைவாகி விட்டனர். பஞ்சாயத்துகள் செய்த செலவு விவரம் கேட்டு அவர்களை எதிர்கொள்ளுங்கள். உங்கள் பணத்தில் அரண்மனை கட்டியவர்கள், தங்கள் மனைவி, மகன், மகள் மற்றும் நண்பர்களுக்கு நகைகளை பரிசாகக் கொடுத்தவர்களை தப்பிச் செல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களை உங்கள் துண்டுகளால் மரங்களில் கட்டி வையுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். திலிப் கோஷின் குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

பா.ஜ.க.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கூறுகையில், திலிப் கோஷ் பா.ஜ.க.வுக்குள் தனது தகுதியை நிரூபிக்க விரும்புவதால் இது போன்ற கருத்துக்களை கூறுகிறார். அவர் பா.ஜ.க.வின் பிற மாநில தலைவர்களால் ஒரங்கட்டப்பட்டுள்ளார். மேலும், பா.ஜ.க.வுக்கு பயங்கரவாதம், ஆயுத பலம், அச்சுறுத்தல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல் மொழி மட்டுமே தெரியும். அவர்களுக்கு ஜனநாயக மரபுகள் மீது மரியாதை இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் சகிப்புத்தன்மை இல்லை. எங்கள் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் ஏதேனும் தவறான செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அவர் மீது நடவடிக்கை உறுதி செய்யப்பட்டது என தெரிவித்தார்.