ராகுலின் நடைப்பயணம் எதிரொலி... பிரதமர் மோடி இன்னும் சில தினங்களில் தொப்பி அணிவார்.. திக்விஜய சிங்

 
2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கிய ஒரு மாதத்துக்குள்  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதரஸா மற்றும் மஸ்ஜித் சென்றார். பிரதமர் மோடியும் இன்னும் சில தினங்களில் தொப்பி (முஸ்லிம்கள் தலையில் அணியும் தொப்பி) அணியத் தொடங்குவார் என்று திக்விஜய சிங் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. இந்த நாட்களில் ராகுல் காந்தியை குறிவைக்கிறது, ஏனெனில், இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கிய ஒரு மாதத்துக்குள்  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதரஸா மற்றும் மஸ்ஜித் சென்றார். பிரதமர் மோடியும் இன்னும் சில தினங்களில் தொப்பி (முஸ்லிம்கள் தலையில் அணியும் தொப்பி) அணியத் தொடங்குவார். 

மோடி

செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் இரண்டு மாதங்களுக்குள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர், நாட்டின் ஏழைகள் ஏழைகளாகி வருகிறார்கள், பணக்காரர்கள் பணக்காரர்களாகி வருகிறார்கள் என்று கூறினார்.  நடைப்பயணம் அதன் இறுதி இலக்கான ஸ்ரீநகரை அடையும் போது என்ன நடக்கும் என்பதை நீங்கள் பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நடைப்பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும்.  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது மகாராஷ்டிராவில் நடந்து கொண்டிருக்கிறது. இம்மாதம் 20ம் தேதியன்று இந்திய ஒற்றுமை பயணம் மத்திய பிரதேசத்தில் நுழைகிறது.