மீனாவை காதலித்தேனா..அந்த உறுத்தல் இருக்கிறது.. ஜெயலலிதாவின் கடைசிக்காலத்தை அம்மா ஞாபகப்படுத்துகிறார்.. மனம் திறந்த திருமா

 
ம்m

60வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.  இன்னமும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதால் அவரை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மறைந்த முதல்வர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், திருமாளவன் சகோதரி, தாய், தந்தை  என்று பலரும் வலியுறுத்தி வந்தாலும் திருமண விசயத்தில் பிடிவாதமாகவே இருந்து வருகிறார் திருமாவளவன்.

ட்ச்

அண்மையில் நடந்த திருமா பிறந்தநாள் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூட,  ‘’என் அப்பா, தலைவர் சொல்லிக் கூட திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளவில்லை.   கலைஞர் சொல்லி அவர் கேட்காத ஒன்று உண்டு என்றால் அது அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதுதான்.   ஒருவேளை 30 ஆண்டுகளுக்கு முன்பாக நான் அவருடன் நண்பராக பழகி இருந்தால், நானே ஒரு பெண்ணைப் பார்த்து திருமாவளவனுக்கு கல்யாணம் செய்து வைத்து இருப்பேன்.  அது முடியாமல் போய்விட்டது’’என்று கூறியிருந்தார்.

திருமா திருமணம் செய்து கொள்ளாததுதான் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று  அவரது சகோதரியும், தாயும் பல பேட்டிகளில் சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார்கள். 

ட்க்

அதனால்தான் இத்தனை பேர் சொல்லியும் ஏன் இந்த விசயத்தில் கல் நெஞ்சாக இருக்கிறீர்கள்? என்று சத்தியம் தொலைக்காட்சியின் நேர்காணலில் நெறியாளர் கேட்க,  ’’அப்பா சாகும்போது இருக்கும் திராணியை எல்லாம் திரட்டி கடைசியாக பேசிய வார்த்தை திருமணம் செஞ்சுக்கோ என்ற வார்த்தைதான்.  அந்த உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது.  இப்போது காலம் கடந்துவிட்டது.  60 வயதாகிவிட்டது.  அதைப்பற்றி இப்போது யோசிக்க முடியாது’’என்றவரிடம்,

ட்

ஜெயலலிதாவின் கடைசிக்காலத்தை பார்த்தீர்களா? அவருக்கு ஒரு வாரிசு இருந்திருந்தால் எப்படி எல்லாம் கவனித்திருப்பார்கள்? என்ற கேள்விக்கு, ‘’இதையேதான் அம்மாவும் என்கிட்ட சொல்லியிருக்காங்க.  என்  அம்மாவுக்கு இப்போது வரைக்கும் இருக்கும் கவலை இதுதான்.  கடைசிக்காலத்தில் என்னை கவனித்துக்கொள்ள பெண் துணை வேண்டும் என்று வருத்தப்படுகிறார்.  என் காலில் விழுந்து கூட திருமணம்செய்து கொள்ளச்சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார்.  நேற்றைக்கும் என் தாய் இதையேச் சொல்லி அழுதார். இன்றைக்கும் அழுகிறார்.  பிரபாகரனை சந்தித்தபோது இங்கு இருக்கும் நானே கல்யாணம் செய்துகொண்டிருக்கிறேன்.  முதலில் நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினார்’’என்றவரிடம்,   

 நீங்கள் நடிகை மீனாவை காதலித்து அந்த தோல்வியில்தான் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே? என்ற கேள்விக்கு,  ’’அவரை நான் பார்த்தது இல்லை. பேசியது இல்லை. அப்படி இருக்கும் எப்படி இப்படி சொல்லலாம். அவரின் பாடல் ஒன்று பிடிக்கும்.  தஞ்சாவூரு மண்ணெடுத்து என்று வரும். அந்த பாடல் ரொம்ப பிடிக்கும். (பொற்காலம் படத்தின் பாடல்) மற்றபடி அவருடன் எனக்கு எந்ததொடர்பும் கிடையாது’’என்றார் உறுதியாக.