மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு காரணம் போக்குவரத்து நெரிசல்.. முன்னாள் முதல்வரின் மனைவி குற்றச்சாட்டு

 
அம்ருதா, தேவேந்திர  பட்னாவிஸ்

மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு காரணம் போக்குவரத்து நெரிசல்தான் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் குற்றம் சாட்டினார். 

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். மும்பையில் நேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, அம்ருதா பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நான் இதை ஒரு சாமானிய குடிமகளாக சொல்கிறேன். ஒரு முறை வெளியே சென்றால் பள்ளங்கள் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை பார்க்கிறேன். 

காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்

போக்குவரத்து நெரிசல் காரணமாக குடும்பத்துக்கு நேரம் செலவிட முடியாமல் மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கள் நடக்கின்றன. அதனால், மாநில அரசு தனது தவறுகளில் அதிக கவனம் செலுத்துமாறு நான் அறிவுறுத்துகிறேன். மகா விகாஸ் அகாடி ஒரு ஏகபோகமாக செயல்படுகிறது. இந்த அரசாங்கம் வசூல் அரசாங்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அம்ருதா பட்னாவிஸ் குற்றச்சாட்டை மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் விமர்சனம் செய்துள்ளார்.

கிஷோரி பெட்னேகர்

மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், அம்ருதா பட்னாவிஸ் நமது முன்னாள் முதல்வரின் மனைவி. போக்குவரத்து நெரிசல் விவாகரத்துக்கு இட்டுச் செல்கிறது என்ற அவரது குற்றச்சாட்டு வியக்க வைக்கிறது. விவாகரத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதை நான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன் என்று தெரிவித்தார்.