மகாராஷ்டிராவில் சரத் பவார் குடும்பத்தின் கோட்டையான பாராமதி தொகுதியை குறிவைத்த பா.ஜ.க...
மகாராஷ்டிராவில் சரத் பவார் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் பாராமதி தொகுதி உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெறும் 16 நாடாளுமன்ற தொகுதிகளில், 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை பா.ஜ.க. தொடங்கி விட்டது
மகாராஷ்டிராவில் பாராமதி நாடாளுமன்ற தொகுதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கி விட்டது. பாராமதி தொகுதிக்கு பொறுப்பாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பா.ஜ.க. மேலிடம் நியமனம் செய்துள்ளதாக மகாராஷ்டிரா துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அஜித் பவார் எதிர்க்கட்சி தலைவர். அவர் இது போன்ற விஷயங்களை சொல்லத்தான் செய்வார்.
அஜித் தாதா தான் ஆட்சியில் இருந்தபோது முதல் 32 நாட்களுக்கு 5 அமைச்சர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார். நீங்கள் கற்பனை செய்வதற்கு முன்பே மாநில அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் 19 நாடாளுமன்ற தொகுதிகளை கண்டறிந்து அங்கு 2024 மக்களவை தேர்தலில் தனது கால்தடத்தை மேம்படுத்தும் பணியை பா.ஜ.க. தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலில் சிவ சேனாவும், பா.ஜ.க.வும் கூட்டணியாக போட்டியிடும் என்பதால், இந்த தொகுதிகளில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் வெற்றியை உறுதி செய்ய பா.ஜ.க. செயல்படும்.
கடந்த தேர்தலில், பா.ஜ.க. அதிக வாக்குகள் பெற்ற பாராமதியில் பா.ஜ.க.வின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சீதாராமன் செப்டம்பரில் பாராமதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். மக்களவை தேர்தலுக்கான பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மற்ற மத்திய பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பயண திட்டங்கள் விரைவில் இறுதி செய்யப்படும். இந்த 16 தொகுதிகளில் மத்திய பா.ஜ.க. தனது ஆற்றலை குவித்து கட்சியின் செயல்திறனை மேம்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.