முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை நியமித்தது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்துவதாகும்.. பட்னாவிஸ்

 
பால் தாக்கரே

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை நியமித்தது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்துவதாகும் என்று பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவேளையில், யாரும் எதிர்பாராத வண்ணம், சிவ சேனாவின் கிளர்ச்சி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக பா.ஜ.க. அறிவித்தது. மகாராஷ்டிராவின் 20வது முதல்வராக சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸூம் பதவியேற்றனர். முன்னதாக மும்பையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை நியமித்தது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்துவதாகும்.

தேவேந்திர பட்னாவிஸ்

இந்துத்துவாவை காப்பாற்றவும், மகாராஷ்டிரா மக்களுக்கு சேவை செய்யவும், சிவசேனா சட்டப்பேரவை கட்சி தலைவர் ஏக்நாம் ஷிண்டேவை ஆதரிக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. 2019ம் ஆண்டில் மகாராஷ்டிரா தேர்தலில் சிவ சேனாவும் எங்களது கட்சியும் இணைந்து போட்டியிட்டது. இருப்பினும், உத்தவ் தாக்கரே அதிகார ஆசையில் எங்களை முதுகில் குத்தி, பா.ஜ.க.வை தூக்கி எறிந்தார். மறைந்த பாலாசாகேப் தாக்கரே தனது முழு அரசியல் வாழ்க்கையிலும் காங்கிரஸூக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆனால் உத்தவ் தாக்கரே சிவ சேனாவின் சித்தாந்தத்தில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தார். 

ஏக்நாத் ஷிண்டே

இது பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து விலக்கி வைப்பதற்கான சதி. மக்கள் சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களித்தனர். மகா விகாஸ் அகாடி அரசாங்கம் புதிய கொள்கைகளை அறிவிக்கவில்லை, ஊழல் பெருகி விட்டது. இந்துத்துவா விஷயத்தில் ஏக்நாத் ஷிண்டே சமரசம் செய்ய கொள்ள மாட்டார் அதனால்தான் பா.ஜ.க. அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது. தான் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் மகா விகாஸ அகாடி கூட்டணிக்கு எதிரானவன் அல்ல என்று ஏக்நாத் ஷிண்டே பலமுறை கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.