பட்டம் பறக்கவிடுவதில் நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள், நாங்கள் இலாகாக்களை ஒதுக்குவோம்... தேவேந்திர பட்னாவிஸ்

 
அவரு பேச பேச பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்- ராகுலை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ்

பட்டம் பறக்கவிடுவதில் நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள், நாங்கள் இலாகாக்களை ஒதுக்குவோம் என்று அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாததை விமர்சனம் செய்த எதிர்க்கட்சிகளுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 30ம் தேதியன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனா- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்தது. துணை முதல்வராக பா.ஜ.க.வின் தேவந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றார். அதுமுதல் 40 நாட்கள் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே அனைத்து துறைகளையும் கவனித்து வந்தனர். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

ஆனால் அவர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாததை வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. குறிப்பாக உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி டிவிட்டரில், மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான அரசாங்கம், முரண்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் சொந்த சுமையின் கீழ் சரிந்து கொண்டு இருக்கிறது. அமைச்சர்களாக பதவியேற்காத  எம்.எல்.ஏ.க்கள் கோபத்தில் உள்ளனர். அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கு இன்னும் இலாகாக்கள் இல்லை. மகாராஷ்டிரா பாதிக்கப்படுகிறது. அவசரத்தில் கிளர்ச்சி செய், ஓய்வு நேரத்தில் மனந்திரும்பு என பதிவு செய்துள்ளார்.

பிரியங்கா சதுர்வேதி

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருவதற்கு துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். நாக்பூரில் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், பட்டம் பறக்கவிடுவதில் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) பிஸியாக இருக்கிறீர்கள், நாங்கள் இலாகாக்களை ஒதுக்குவோம், அது விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார்.