யார் உண்மையான சிவ சேனா என்பதை நிரூபித்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்துக்கள்.. தேவேந்திர பட்னாவிஸ்

 
வெள்ளிக்கிழமைக்குள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்! சிவ சேனாவுக்கு அல்வா கொடுத்த பா.ஜ.க.

தசரா கூட்டத்தின் மூலம் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என்பதை நிரூபித்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்புகிறேன் என பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவ சேனா கட்சி தற்போது இரண்டு பிரிவுகளாக உள்ளது. மகாராஷ்டிரா  முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவு நேற்று முன்தினம் நடத்திய தசரா கொண்டாட்ட கூட்டத்தில், மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனை குறிப்பிட்டு ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவ சேனாதான் உண்மையான சிவ சேனா என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 

ஏக்நாத் ஷிண்டே

முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நான் வாழ்த்த விரும்புகிறேன். எது உண்மையான சிவ சேனா என்பதை அவர் நிரூபித்தார். முதல்வர் ஷிண்டேவின் சிவ சேனாதான் உண்மையான சிவ சேனா என்பதை நிறுவிய அவரது பேரணிக்கு மாநிலம் முழுவதும் இருந்து மக்கள் வந்திருந்தனர். சட்டப்பேரவையில் காவி இருக்கும், ஆனால் அந்த காவி உண்மையான சிவ சேனாவின் காவி நிறமாக இருக்கும். அதாவது ஷிண்டேவின் சிவ சேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி. உத்தவ் தாக்கரே மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை ஆதரித்தார். சாவர்க்கரை கெட்டவர் என்று தினமும்  அழைத்தவர்களை அழைத்து சென்றார், எனவே அவர் அத்தகைய நேரங்களை பார்க்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டேவை கட்டப்பா என்று உத்தவ் தாக்கரே விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு ஏக்நாத் ஷிண்டே தசரா கூட்டத்தில், பதிலடி கொடுத்தார். அந்த கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே உரையாற்றுகையில், என்னை கட்டப்பா என்று சொல்கிறார்கள். அவருக்கும் (கட்டப்பா) சுயமரியாதை இருந்தது, உங்களை போல் இரட்டை வேடம் போடவில்லை என்பதை நான் உங்களுக்கு சொல்ல  விரும்புகிறேன் என தெரிவித்தார்.