மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று விரிவாக்கம்?. அமைச்சரவை பட்டியலுடன் டெல்லி பறந்த தேவேந்திர பட்னாவிஸ்..

 
வெள்ளிக்கிழமைக்குள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்! சிவ சேனாவுக்கு அல்வா கொடுத்த பா.ஜ.க.

மகாராஷ்டிரா அமைச்சரவைக்கான இறுதி பட்டியலுக்கு பா.ஜ.க. தலைமையிடம் ஒப்புதல் பெறுவதற்காக தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்றார். இன்று மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது. இதனையடுத்து, தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனா கிளர்ச்சி-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்தது. 

ஏக்நாத் ஷிண்டே

கடந்த ஜூன் 30ம் தேதியன்று முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸூம் பதவியேற்றனர். அது முதல் இதுவரை மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. முதல்வர் ஷிண்டேவும், துணை முதல்வர் பட்னாவிஸூம் மட்டுமே அனைத்து துறைகளையும் கவனித்து வந்தனர். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததை தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. அதேசமயம், கடந்த மாதம் 27ம் தேதியன்று மகாராஷ்டிரா அமைச்சரவை பட்டியல் வரைவுடன் ஷிண்டேவும், பட்னாவிஸூம் டெல்லி சென்று பா.ஜ.க. தலைமையை சந்தித்தனர். ஆனால் அப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பா.ஜ.க.

இந்நிலையில், இந்த மாத பிற்பகுதியில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதால், மகாராஷ்டிரா அமைச்சரவைக்கான இறுதி பட்டியலை ஷிண்டேவும், பட்னாவிஸூம் தயாரித்தனர். இதனையடுத்து அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதற்காக தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கிளம்பி சென்றார். ஷிண்டேவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் டெல்லி செல்லவில்லை.  பா.ஜ.க. தலைமை மகாராஷ்டிரா அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து விட்டால், இன்று மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என பா.ஜ.க. வட்டாராங்கள் தெரிவித்தன. கிளர்ச்சியில் ஈடுபட்ட சிவ சேனா எம்.எல்.ஏ.களில் பலருக்கு வெகுமதி (அமைச்சர் பதவி) வழங்கப்படும் என தகவல்.