பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிடுங்க.. கவர்னரிடம் பட்னாவிஸ் வேண்டுகோள்

 
தேவேந்திர பட்னாவிஸ், பகத் சிங் கோஷ்யாரி

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில கவர்னரிம் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஒரு கடிதம் வழங்கினார். அந்த கடிதத்தில், அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக செய்தி.

கிளர்ச்சி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள்

மகாராஷ்டிரா கவர்னர் கோஷ்யாரியை சந்தித்த பிறகு தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் கவர்னரிடம் ஒரு கடிதம் கொடுத்துள்ளோம், அந்த கடிதத்தில், சிவ சேனாவின் 39 எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் சிவ சேனாவுடன் இல்லை என்றும், மகா விகாஸ் அகாடி அரசுக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக வாக்கெடுப்பு நடத்தும்படி உத்தரவிட வேண்டும் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.