சசிகலா பாஜகவில் இணைவது குறித்து டெல்லி தலைமை முடிவு செய்யும் - அண்ணாமலை
சசிகலா பாஜகவில் இணைகிறார் என்று செய்திகள் பரவ, அதை உறுதிப்படுத்தும் விதமாக நயினார் நாகேந்திரனும் பேசியிருப்பதால், சசிகலா பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்விக்கு, சசிகலா பாஜகவில் இணைவது குறித்து டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று சொல்லி இருக்கிறார் அண்ணாமலை.
அதிமுகவில் இணைவதற்காக சசிகலா எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிகின்றன. அதனால் அதிமுகவில் இணைவதற்கு பாஜக டெல்லி தலைமையை பெரிதும் நம்பி இருப்பதாக தகவல் பரவின. நடிகையும் பாஜக பிரமுகருமான விஜயசாந்தி மூலம் அந்த முயற்சி எடுத்து வந்திருக்கிறார். அதிமுகவில் இணைவதற்கு உதவி செய்யும் படிதான் டெல்லி பாஜக தலைமையிடம் சசிகலா விஜயசாந்தி மூலமாக உதவி கேட்டதாக தகவல்கள் வந்தன.
சசிகலாவை சந்திக்க அமித்ஷாவும் அனுமதி கொடுக்கவில்லை என்றும் தகவல் பரவின. இந்நிலையில், தற்போது மீண்டும் சசிகலாவை ரகசியமாக சந்தித்திருக்கிறார் விஜயசாந்தி. இந்த சந்திப்பிற்கு பின்னர் சசிகலா டெல்லி செல்வதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன என்று தகவல் பரவியது. அதாவது அதிமுகவிற்குள் சசிகலா வருவதற்கு பாஜக தலைமை உதவி செய்யப் போவதாக தகவல் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது வந்துகொண்டிருக்கும் தகவல்கள் வேறு மாதிரியாக இருக்கிறது. சசிகலா பாஜகவிற்கு செல்லவிருக்கிறார் என்று தகவல் வருகிறது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ‘’சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும் . அப்படி அதிமுகவில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் பாஜகவில் சேர்ந்தால் சசிகலாவை வரவேற்போம். அப்படி சசிகலா பாஜகவில் சேர்ந்தால் பாஜகவிற்கு அது உறுதுணையாக இருக்கும் . இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் சசிகலா பாஜகவில் இணைகிறார் என்று செய்தி பரவ, அதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்க, ‘’சசிகலாவை பாஜகவில் இணைப்பது குறித்த நயினார் நாகேந்திரன் கருத்து அவரது சொந்த கருத்து. அது பாஜகவின் கருத்து இல்லை . பாஜகவை பொறுத்தவரையிலும் கட்சியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால் குறிப்பிட்ட சிலர் இணைவது குறித்து டெல்லி தலைமை முடிவு செய்யும்’’ என்று தெரிவித்தார்.
’குறிப்பிட்ட சிலர்’ என்று அண்ணாமலை ’குறிப்பிட்டு’ சொன்னது சசிகலாவைத்தான் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.