அரவிந்த் கெஜ்ரிவாலை தடுக்க முயற்சிக்கிறார்,ர் சிறிய தலைவரை கண்டு பயப்படுகிறார்... மோடியை சாடிய மணிஷ் சிசோடியா

 
மோடி

பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவாலை தடுக்க முயற்சிக்கிறார், அவர் சிறிய தலைவரை கண்டு பயப்படுகிறார் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.

கடந்த 2012 ஜனவரியில் டெல்லி மாநகராட்சி, தெற்கு டெல்லி மாநகராட்சி, வடக்கு டெல்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு டெல்லி மாநகராட்சி என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது. மாநகராட்சி பிரிப்பு சரியாக இல்லாததால் காலப்போக்கில் 3 மாநகராட்சிகளின் நிதி சிக்கல்களை அதிகரித்தது, மாநகராட்சிகளின் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்களை சரியான நேரத்தில் வழங்க முடியாமல் திணறி வருகின்றன. இதனால் 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை ஒன்றாக இணைப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய், டெல்லி மாநகராட்சி (திருத்தம்) மசோதா 2022ஐ தாக்கல் செய்தார். அதேசமயம் இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் டெல்லி யூனியன் பிரதேசத்தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியதாவது: டெல்லி மாநகராட்சி தேர்தலை மட்டும் நிறுத்தும் வகையில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது டெல்லி மாநகராட்சியில் சீர்த்திருத்தங்களை கொண்டு வர விரும்பவில்லை. இந்த மசோதாவில் ஊழலை ஒழிப்பது, டெல்லி மக்களுக்கு நல்ல சாலைகள் வழங்குவது அல்லது மாநகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பான எதுவும் இல்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மாநகராட்சி தேர்தலை நிறுத்துவதே அதன் நோக்கம். உலகின் மிகப்பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சி தேர்தலில் தோல்வியடையும் என்ற பயத்தில் ஒரு சிறிய கட்சியை கண்டு பயப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவாலை தடுக்க முயற்சிக்கிறார் அவர் சிறிய தலைவரை கண்டு பயப்படுகிறார். ஒரு தலைவரை நிறுத்தவும், தேர்தலை தவிர்க்கவும் ஒரு சட்டத்தை  அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது இதுவே முதல் முறை. டெல்லி சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.