குஜராத் ஆட்டோ பயணம் விவகாரம்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பா.ஜ.க. 5 ஆட்டோக்கள் பரிசு

 
பா.ஜ.க. எம்.எல்.ஏ. கெஜ்ரிவாலுக்கு  பரிசாக கொண்டு வந்த ஆட்டோக்கள்

குஜராத்தில் ஆட்டோவில் பயணிப்பேன் என்று அம்மாநில போலீசாருடன் வாக்குவாதம் செய்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, 5 ஆட்டோக்களை பரிசளித்து பா.ஜ.க. கிண்டலாக தாக்கியுள்ளது.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வார தொடக்கத்தில் 2 நாள் பயணமாக குஜராத் சென்று இருந்தார். கடந்த 12ம் தேதியன்று அகமதாபாத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் தான் தங்கியிருந்த 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து அந்த ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவில் சென்றார். முன்னதாக பாதுகாப்பு காரணங்களை கூறி ஆட்டோவில் பயணிக்க வேண்டாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோவில் செல்வதை  குஜராத் போலீசார்  தடுக்க முயன்றனர். இதனால் குஜராத் காவல் துறையினருக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

இன்று முதல்வராக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

இறுதியில், அரவிந்த் கெஜ்ரிவால் பயணித்த ஆட்டோவில் ஆட்டோ ஒட்டுநரின் அருகில் ஒரு போலீஸ்காரர் அமர்ந்து கொண்டார். மேலும் இரண்டு போலீஸ் வாகனங்களும் ஆட்டோவை பாதுகாப்பாக அழைத்து சென்றன. குஜராத்தில் வலுகட்டாயமாக ஆட்டோவில் பயணித்த அரவிந்த் கெஜ்ரிவாலை பா.ஜ.க. கிண்டலாக தாக்கியுள்ளது. டெல்லி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்வீர் சிங் பிதுரி நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 ஆட்டோக்களை பரிசாக அளிப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றார். இது தொடர்பாக ராம்வீர் சிங் பிதுரி கூறியதாவது:   அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 27 வாகனங்கள் உள்ளன, 200 பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

 ராம்வீர் சிங் பிதுரி

ஆனாலும் குஜராத்தில் ஆட்டோவில் பயணம் செய்ய வலியுறுத்தி நாடகம் நடத்தினார். எனவே டெல்லியில் மூன்று சக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவேற்ற இந்த ஆட்டோக்களை பரிசளிக்கிறோம். ஒரு ஆட்டோவை பைலட்டாகவும், ஒன்று மூவர்ண கொடியுடன் உள்ள ஒரு ஆட்டோ முதல்வருக்காவும், மற்றொன்று அவரை அழைத்து செல்பவர்களுக்காகவும், ஒன்று அவரது தனி செயலாளருக்கும்  இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.