முதல்வரை தள்ளிவிட்ட பாதுகாவலர்!நிலைதடுமாறிய ரங்கசாமி! வலுக்கும் கண்டனத்தால் பணியிடை மாற்றம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை உள்துறை அமைச்சரின் பாதுகாவலர் தள்ளி விட்டதால் நிலைதடுமாறி பின்னோக்கி கீழே விழுவதற்குள் சுதாரித்துக்கொண்டு நின்றிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த பாதுகாவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் கோகிலாம்பிகை கோயில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தேரோட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
இதற்காக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்க வந்துள்ளனர். அப்போது கூட்டம் அதிகமானதால் பாதுகாவலர்கள் போராட்டத்திற்கு பின்னர் ஆளுநரையும், முதல்வரையும் அழைத்து வருகிறார்கள். அதன்பின்னே உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வந்து கொண்டிருக்கிறார்.
நமச்சிவாயத்திற்கு வழி ஏற்படுத்துகிறேன் என்று அவரின் பாதுகாவலர் , அந்த பதற்றத்தில் முதல்வர் ரங்கசாமியை கைகளால் தள்ளி விடுகிறார். இடது கையால் தள்ளி விடுகிறார் . இதனால் முதல்வர் ரங்கசாமி நிலைதடுமாறி பின்னோக்கி இழுத்துச் செல்லப்படுகிறார். நல்ல வேலையாக அவர் சுதாரித்துக் கொண்டு அவர் நின்று விடுகிறார். அதன் பின்னர் அனைவரும் வடத்தை பிடித்து இழுத்து தொடங்கி தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.
இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆனது. ஒரு பாதுகாவலர் முதல்வரை இப்படி செய்யலாமா என்று பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது . தற்போது உள்துறை அமைச்சரின் பாதுகாவலராக பணிபுரிந்த ராஜசேகர் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போதும் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போதும் அவருக்கு பாதுகாவலராக பணிபுரிந்துள்ளார். திருபுவனை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது மீண்டும் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருக்கும் பட்சத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார்.
முதலமைச்சரிடம் இவ்வாறு நடந்து கொண்ட பாதுகாவலர் ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் புதுச்சேரி காவல்துறை தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு அலுவலர் ராஜசேகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தலைமை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.