"தமிழகத்தை காங். ஆளும் நாள் வரும்" - புது குண்டை தூக்கிப்போட்ட கேஎஸ் அழகிரி.. அப்செட்டில் திமுக!

 
கேஎஸ் அழகிரி

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டுள்ளது. சொல்லப்போனால் வாரிச் சுருட்டியிருக்கிறது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதன் கூட்டணியிலிருந்து பிரிந்த பாஜகவும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பதிவு செய்யவில்லை. கன்னியாகுமரியில் மட்டுமே அதிக வார்டுகளில் வென்றுள்ளது. 2011ஆம் ஆண்டு நகர்ப்புற தேர்தலை ஒப்பிடுகையில் 1% கூட பாஜக வளவரவில்லை என்பதே உண்மை. 

ஆனால் அக்கட்சி தலைவர்களும் தொண்டர்களும் ஏதோ பெரிதாக சாதித்தது போல கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் மூன்றாம் பெரிய கட்சி நாங்கள் தான் என்கிறார்கள். தமிழ்நாட்டில் தாமரை மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை எனவும் கூறியுள்ளார்கள். இச்சூழலில் இதெல்லாம் பொய் எனக்கூறி காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தாங்கள் தான் 3ஆவது பெரிய கட்சி என்று கூறி வருகிறார். மற்ற மாநிலங்களில் முதலிடத்துக்கு தான் போட்டி இருக்கும். தமிழ்நாட்டில் மட்டும் 3ஆவது யார் என்பதில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் குடுமிபிடி சண்டை போய் கொண்டிருக்கிறது.

கேஎஸ் அழகிரி

இச்சூழலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி ஆளும் திமுகவுக்கு எதிராகவே புது குண்டை தூக்கி போட்டுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கு தேவையான விமானங்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களை வாங்கி 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு, 3வது இடம் குறித்து உரிமை கோருவதில் உண்மை இருக்க வேண்டும். 

Rahul Gandhi attacks govt on jobs, economy & China-Pakistan, says 'nation  is at risk' - India News

தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக அல்ல, 30ஆவது கட்சியாக இருந்தாலும் அதுகுறித்து கவலை இல்லை. பாஜகவிடம் இருந்து அதிமுக விலகி இருப்பதற்கான காரணத்தை கூற வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக ஒரு நாள் மாறும். வரும் 28 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி, "உங்களில் ஒருவன்" நூலை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நூல் வெளியிட்டு விழாவுக்கு பிறகு, உள்ளாட்சியில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அவர்களின் கடமைகள் பற்றி ராகுல் காந்தி எடுத்துரைப்பார்” என்றார். காங்கிரஸ் திமுகவின் கூட்டணியில் இருந்துகொண்டு ஒருநாள் ஆளுங்கட்சியாக மாறும் என அவர் பேசியிருப்பது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.