திமுக எம்.எல்.ஏ. அடாவடி! வெறும் கைகளால் சாக்கடை அள்ள வைத்த கொடுமை
வெறும் கையால் சாக்கடை அள்ளி இருக்கிறார் மாநகராட்சி ஊழியர் ஒருவர். திமுக எம்எல்ஏவின் கண் முன்னே அவரின் உத்தரவின் பேரில் இது நடந்துள்ளது என்று சர்ச்சை எழுந்திருக்கிறது.
சென்னை ஆர். கே. நகர் தொகுதி எம்எல்ஏ எபினேசர். திமுக எம்எல்ஏவான இவர் தண்டையார்பேட்டை பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து வந்திருக்கிறார். அப்போது அப்பகுதியில் உள்ள தெரு ஒன்றில் ஆழ்குழாயில் தண்ணீர் செல்ல முடியாமல் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சமூக அவலத்திற்கு துணைபோகும் சட்டமன்ற உறுப்பினர். குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட வேண்டுமா? சமூக நீதி காவலர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்களின் சமூக அநீதி.நடவடிக்கை பாயுமா இந்த சட்டமன்ற உறுப்பினர் மீது? pic.twitter.com/XyQ4koj2Ed
— Narayanan Thirupathy (@narayanantbjp) January 4, 2023
உடனே அந்த இடத்தை நேரில் பார்வையிட்ட எபினேசர் எம்எல்ஏ, அங்கு சாக்கடையாக கிடந்ததை கண்டு ஆத்திரம் அடைந்திருக்கிறார். உடனே மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து இருக்கிறார். அவர்கள் உடனே மாநகராட்சி ஊழியர் ஒருவரை வரவழைத்து இருக்கிறார்கள். உடனே சாக்கடையை சுத்தம் செய்ய வைத்துள்ளார்கள்.
அதிகாரிகள், எம்எல்ஏ உத்தரவிட்டு அங்கேயே நின்றதால் அந்த ஊழியரும் அச்சத்தில் எதுவும் சொல்ல முடியாமல், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் முழங்கை அளவு கையை உள்ளே விட்டு கழிவுகளை வெளியே அள்ளி வீசுகிறார். இந்த அவல வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையால் மாநகராட்சி ஊழியரை சாக்கடையில் அல்ல எம்எல்ஏ எபினேசரும் அதிகாரிகளும் எப்படி அனுமதித்தார்கள் என்று கண்டனம் வலுத்து வருகிறது.
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், ‘’சமூக அவலத்திற்கு துணைபோகும் சட்டமன்ற உறுப்பினர். குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட வேண்டுமா? சமூக நீதி காவலர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்களின் சமூக அநீதி. நடவடிக்கை பாயுமா இந்த சட்டமன்ற உறுப்பினர் மீது?’’ என்று கேட்டிருக்கிறார்.