தனிநபரை வணங்காமல் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபடுங்க.. சித்தராமையா ஆதரவாளருக்கு டோஸ் விட்ட சிவ குமார்

 
டி.கே.சிவகுமார்

எந்தவொரு தனிநபரையும் வணங்காமல் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும் என்று சித்தராமையா ஆதரவாளருக்கு கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு டி.கே.சிவகுமார் பதில் கொடுத்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே அதிகார போட்டி நிலவுவதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக தங்களை முன்னிலை படுத்துவதில் சித்தராமையா ஆதரவாளர்களுக்கும், டி.கே.சிவகுமார் ஆதரவாளர்களுக்கும் இடையே போட்டி நடப்பதாக கூறப்படுகிறது. 

சித்தராமையா

இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமது, கர்நாடக மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக சித்தராமையாவை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்,  எந்தவொரு தனிநபரையும் வணங்காமல் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர அனைவரும் பாடுபட வேண்டும் என காட்டமாக பதில் அளித்து இருந்தார். இதனையடுத்து இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கூறியதாவது: 

ஜமீர் அகமது

நம் கர்நாடக காங்கிரஸ் தலைவருக்கு கோபம் வந்தால் என்ன செய்வது?, நான் என்ன செய்தேன்?, என் கருத்தை சொன்னேன். எங்கள் கட்சியின் உயர்மட்ட குழு, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வார்கள். அடுத்த முதல்வராக சித்தராமையா இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அரசியல் சாசனத்தில் எனது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. எனது கருத்துக்களை தெரிவிப்பதில் தவறில்லை, கட்சியின் தலைவரையும் நான் மதிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.