கட்சியின் பெயர், சின்னத்துடன் அறிக்கை வெளியிடும் ஓபிஎஸ் மீது சட்ட நடவடிக்கை- சி.வி.சண்முகம்

 
cv

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கட்சியை கைப்பற்றுவதற்கான போட்டி மட்டுமில்லாமல் தலைமைக்கான போட்டி யும் நீடித்து வரும் நிலையில்  மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்றார்.  ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி சண்முகம், “ ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியின் அறிக்கையை வெளியிடுவது முற்றிலும் தவறானது, சட்டத்திற்கு புறம்பான செயல், ஒரு முதலமைச்சராக இருந்தவர் சட்ட விதிமுறை படி நடக்க வேண்டும். ஆனால் அவர் நடக்கவில்லை அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் முதலமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்த கட்சி அலுவலகத்திற்கு சென்று அதை சூறையாடி, அவணங்களை திருடி சென்றார். அந்த நபர் இது போன்ற தவறான செயலை செய்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதிமுக விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பின்னர் ஓ.பி.எஸ் கட்சியின் பெயர், சின்னம் அடங்கிய அறிக்கையை பயன்படுத்துவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், ஓ.பி.எஸ் இப்போது அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. 

ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு விட்டது. மேலும் , ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட போவதில்லை. நாங்கள் தான் அதிமுக என்பதை அங்கீகரிக்கும் வகையிலான ஆவணங்களை கொடுத்துள்ளோம். அதன்மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.