லஞ்ச ஒழிப்புத்துறையில் உதயகுமார் செய்த ஊழல் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன்- கோவை செல்வராஜ்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப் போவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில், அவரது ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை முறையாக அழைத்து பேசாமல், தங்கமணி, வேலுமணியை வைத்தே கூட்டணி குறித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக வேட்பாளர்களை தேர்வு செய்தார். இவற்றை அன்றே ஓ.பி.எஸ்.வெளியில் பேசியிருந்தால் கட்சி பிளவு பட்டிருக்கும். துரோகங்களை தாங்கிக்கொண்டு ஓ. பன்னீர் செல்வம் கட்சிப் பணி செய்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 80 தொகுதியில் அதிமுக தோல்வி அடைய காரணம் எடப்பாடி பழனிசாமி செய்த உட்கட்சி துரோகம் தான். மேலும் வரும் திங்கட்கிழமை புதிய நிர்வாகிகளை ஓ. பன்னீர் செல்வம் நியமிப்பார். அதிமுகவின் வேட்பாளர்களுக்கு எதிராக சதி செய்தவர்களின் பட்டியலை வெளியிடுவேன். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துத்துள்ளார். அம்மா பெயரில் கோவில் கட்டிய இடத்தில் தனது தந்தையை அடக்கம் செய்து சுடுகாடு ஆக்கிவிட்டார். லஞ்ச ஒழிப்பு துறையில் உதயகுமார் செய்த ஊழல் தொடர்பாக புகார் அளிக்க உள்ளேன்.ஓ. பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாக வில்லை. கொரோனா நெகடிவ் என்று தான் வந்துள்ளது” எனக் கூறினார்.