அதிமுகவை அழிக்கும் நடவடிக்கையில் ஈபிஎஸ் ஈடுபடுகிறார்- கோவை செல்வராஜ்

 
Covai Selvaraj

இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு பற்றி எங்களுக்கு கவலை இல்லை, இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டியளித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக பொதுக்குழு விவகாரத்தில்  நீதிபதிகளின் தீர்ப்பு மாறி, மாறி வருகிறது. நீதிபதிகளின் தீர்ப்பை மதிப்பவர் ஓபிஎஸ். அதிமுகவின் நிர்வாகிகள் பட்டியலை கடந்த  29.04.2022 அன்று தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளோம். கட்சியை பொருத்தமட்டில் தேர்தல் ஆணையம் கூறுவதையே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி தற்போது வரை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளனர். மேலும் பொருளாளராக ஓ‌.பன்னீர்செல்வமே தொடர்கிறார். 


இவர்களது தலைமையில் தான் நடந்து முடிந்த இரண்டு தேர்தலை அதிமுக சந்தித்தது. மேலும் எடப்பாடிக்கு முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் எதிர்கட்சி தலைவர் என அனைத்தையும் ஓபிஎஸ் வழங்கியுள்ளார். ஆனால் அதிமுக கட்சியை அழிக்கும் நடவடிக்கையில் ஈபிஎஸ் ஈடுபடுகிறார். எடப்பாடி பழனிச்சாமி அதனை கைவிட வேண்டும். ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியில் அமர நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் செயலை பார்த்து தொண்டர்கள் வேதனை படுகின்றனர். நிச்சயமாக ஓபிஎஸ் தலைமையில் அதிமுக வழி நடத்தப்படும். இடைக்கால தீர்ப்பை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 
தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது. ஓபிஎஸ் இருக்கும் வரை அதிமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது" எனக் கூறினார்.