எடப்பாடிக்கு எதிராக ஆலோசனைக்கூட்டம்! சொந்த மாவட்டத்திலேயே ஆப்பு

 
e


 அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.  அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி இருக்கிறார்.  பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி , அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார். உண்மையானது அதிமுக எது என்பதில் தொண்டர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது. 

இதில் தொண்டர்களின் ஆதரவை திரட்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருமே சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.  தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிற்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லி உச்சபட்ச பாதுகாப்பு கேட்டு இருக்கிறார்.

l

 இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.  அந்த போஸ்டர்களில் ஓபிஎஸ் படமும் இல்லை, இபிஎஸ் படமும் இல்லை.   எம்ஜிஆர் -ஜானகி, எம்ஜிஆர் -ஜெயலலிதா,  பெரியார்,  அண்ணா ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.   எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்கள் ,தொண்டர்கள் ஜெயலலிதா பேரவை உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆகியோர்கள் அந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர் . நாளை திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் ஆலோசனை கூட்டம் கூட்டியுள்ளனர்.   இந்த கூட்டத்தில் அதிமுகவிற்கு புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

eo

எம்ஜிஆர் அவர்கள் அதிமுக கட்சி தொடங்கிய 1972 ஆம் ஆண்டு கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி அதில் அதிமுக பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி இருக்கிறார்.   இந்த உரிமையை மீட்டெடுத்து புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க இதய தெய்வம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான கழகத்தின் மூத்த உடன்பிறப்புகளும் கழகத்தின் முன்னோடிகளும், கழக உறுப்பினர்களும் தொண்டர்களும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான விசுவாசிகளும் தொண்டர்களும் தலைவர் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்களும் தொண்டர்களும் கழகத்தின் சட்ட விதியின்படி குறித்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.  ஆலோசனை கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது .

எடப்பாடி பழனிச்சாமி சொந்த மாவட்டத்தில் இந்த போஸ்டர்களும் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டமும் எடப்பாடிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.