மன்னிப்பு கேட்பது அவர்களின் பழைய பழக்கம்.. பா.ஜ.க.வை தாக்கிய காங்கிரஸ்
ராகுல் காந்தி வெளிநாடு செல்வதால், நடைப்பயணத்தை காங்கிரஸ் நிறுத்தி வைத்ததாக பா.ஜ.க. கூறியதை குறிப்பிட்டு, அவர்கள் மீண்டும் பொய் சொல்லி பிடிபட்டுள்ளனர், அவர்கள் மன்னிப்பு கேட்பார்களா?, மன்னிப்பு கேட்பது அவர்களின் பழைய வழக்கம் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, விடுமுறைக்காக யாத்திரையை இடைநிறுத்துபவர்கள் மற்றும் ஒரு நாள் கூட கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாதவர்கள் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை பற்றி பேசுவது விசித்திரமாக இருக்கிறது என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
ராகுல் காந்தி கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வெளிநாடு செல்வார் என்று பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறியிருந்தார். ஆனால் கடும் குளிரில் போர்வை போர்த்திக் கொண்டு அமைச்சரும், பா.ஜ.க. தலைவரும் நாட்டைப் பிரிப்பதில் மும்முரமாக இருந்தபோது, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, சவுத்ரி சரண் சிங் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
அவர்கள் (பா.ஜ.க.) தங்களது பொய்க்காகமன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். இன்று மீண்டும் (ராகுல் காந்தி வெளிநாடு செல்வதற்காக யாத்திரை நிறுத்தம்) பொய் சொல்லி பிடிபட்டுள்ளனர். மன்னிப்பு கேட்குமா மஃபீயர்களின் ராணுவம்? மன்னிப்பு கேட்பது அவர்களின் பழைய பழக்கம் எனவே அது ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மன்னிப்பு கேட்பது அவர்களின் பழைய வழக்கம் என்று வீர் சாவர்க்கரை குறிப்பிட்டு சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாக கூறப்படுகிறது.