மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் புல்டோசர் மாமா பேனர்கள்.. காங்கிரஸ் ஆவேசம்
மத்திய பிரதேசம் போபாலில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் புல்டோசர் மாமா பேனர்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. ஷியோபூர் மாவட்ட நிர்வாகம் கடந்த 17ம் தேதியன்று காளி தலை காட்டில் பழங்கடி சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்களின் வீடுகளை இடித்து தள்ளியது. சியோனி மாவட்டத்தில் மற்றொரு கும்பல் பலாத்கார குற்றவாளியின் வீடு கடந்த திங்கட்கிழமையன்று புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. அன்றைய தினம் அம்மாநில தலைநகரான போபாலில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டது.
அந்த பேனரில் புல்டோசர் பேக்கிரவுண்டில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் படம் உள்ளது . மேலும் அந்த பேனரில், சகோதரிகள் மற்றும் மகள்களை அடக்கி விளையாடியவர்கள் இனி புல்டோசர்களை எதிர்க்கொள்வார்கள். எங்கள் மகள்களின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு மாமா முதல்வரின் புல்டோசர் ஒரு சுத்தியலாக இருக்கும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. போபாலில் வைக்கப்பட்டுள்ள சிவ்ராஜ் சிங் சவுகானின் பேனர்களை அரசியல் ஸ்டண்ட் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா கூறியதாவது: இது போன்ற செயல்களில் மூலம் அரசியல் லாபம் ஈட்டுவதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் இந்த கொடூரமான குற்றங்களை தடுக்க அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும். சிவ்ராஜ் சிங் சவுகானும் அவரது அரசாங்கமும் உண்மையில் தீவிரமாக இருந்தால், அவர்கள் ஒவ்வொரு நாளும் ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகளை இடிக்க புல்டோசரை பயன்படுத்த வேண்டும். பெண்களின் திருமணத்துக்கு ஒதுக்கப்பட்ட கோடிகளை மோசடி செய்தவர்கள் மீது புல்டோசர் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.