பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி, இப்பம் ரூ.9.50 குறைப்பு.. மக்களை ஏமாற்றாதீங்க.. காங்கிரஸ்

 
பெட்ரோல், டீசல்

பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி விட்டு, இப்போது லிட்டருக்கு ரூ.9.50 குறைக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றாதீர்கள் என மத்திய அரசின் எரிபொருள் மீதான கலால் வரி குறைப்பு நடவடிக்கையை காங்கிரஸ் விமா்சனம் செய்துள்ளது.

மத்திய அரசு நேற்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுகிறது என அறிவித்தது.  இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும். விலை குறைப்பின் மூலமாக மத்திய அரசுக்கு கலால் வரியின் மூலம் கிடைக்கக்கூடிய 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இந்நிலையில், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு நடவடிக்கை மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டிவிட்டரில், அன்புள்ள நிதியமைச்சர், இன்று பெட்ரோல்  விலை லிட்டருக்கு ரூ.105.41. இதன் விலை ரூ.9.50 குறைக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் 21ம் தேதியன்று அதாவது 60 நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.95.41ஆக இருந்தது. 60 நாட்களில், பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி விட்டு, இப்போது லிட்டருக்கு ரூ.9.50 குறைக்கப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றாதீர்கள். என பதிவு செய்து இருந்தார்.

ஜெய்வீர் ஷெர்கில்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்வீர் ஷெர்கில் டிவிட்டரில், 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 531 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 206 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து ரூ.26 லட்சம் கோடி  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டு இன்று ரூ.9.50 குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய கலால் வரி குறைப்ப பேண்ட் எய்ட் என்று கூட தகுதி பெறவில்லை. ஆனால் வெறும் தந்திரம் என பதிவு செய்து இருந்தார்.

ப சிதம்பரம்
ப.சிதம்பரம் டிவிட்டரில், 2 மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் குறைக்கப்பட்டது. இது பீட்டரை அதிகம் கொள்ளையடிப்பதற்கும், பீட்டருக்கு குறைவாக சம்பளம் கொடுப்பதற்கும் சமம். மாநிலங்களுக்கு நிதியமைச்சரின் அறிவுரை அர்த்தமற்றது. மத்திய கலால் வரியை ஒரு ரூபாயை குறைக்கும்போது அந்த ரூபாயில் 41 பைசா மாநிலங்களுக்கு சொந்தமானது என பதிவு செய்து இருந்தார்.