2023 மத்திய பிரதேச சட்டப்பேரவை தயாராகும் காங்கிரஸ்.. கமல்நாத் தலைமையில் தேர்தலை சந்திக்க முடிவு

 
கமல் நாத்

2023ம் ஆண்டில் நடைபெற உள்ள மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கமல்நாத் தலைமையில் சந்திக்க அம்மாநில காங்கிரஸ் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் 2023ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு காங்கிரஸ் இப்போதே தயாராகி வருகிறது. போபாலில் உள்ள ஷியாம்லா ஹில்ஸில் உள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீட்டில் நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர்கள திக்விஜய சிங் , அருண்யாதவ் மற்றும் அஜய் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

இந்த கூட்டத்தில், கமல்நாத் மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நீடிப்பார் என்றும், 2023 சட்டப்பேரவை தேர்தலில் கமல்நாத் தலைமையில் கட்சி போட்டியிடும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கட்சியை வழி நடத்த வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட்டு அவரது தலைமையில் ஆட்சி அமைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கட்சியின் அனைத்து தலைவர்களும கமல்நாத்திடம் தெரிவித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருண் யாதவ்

மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் யாதவ் டிவிட்டரில், பா.ஜ.க.வின் தவறான ஆட்சிக்கு 2023ம் ஆண்டில் ராகுல் காந்தி மற்றும் கமல்நாத் சவால் விடுவார்கள் என்று பதிவு செய்துள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸின் ஊடகத் துறை தலைவர் ஜிது பட்வாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிவ்ராஜ் சிங் சவுகான் அரசின் தவறான ஆட்சி, ஊழல் மற்றும் விவசாய நெருக்கடிகள்  போன்ற பிரச்சினைகளில் 2023 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். பொருளாதாரம் துயரத்தில் உள்ளது, சமூக நல்லிணக்கம் சீர் குலைந்துள்ளது, இளைஞர்களும், விவசாயிகளும் போராடி வருகின்றனர். கமல்நாத் தலைமையின்கீழ் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது என்று தெரிவித்தார்.