மக்களிடம் தங்கள் தேச பக்தியை நிரூபிக்கும்படி கேட்க வேண்டிய அவசியமில்லை.. பா.ஜ.க. முதல்வருக்கு காங்கிரஸ் பதிலடி

 
காங்கிரஸ்

மக்களிடம் தங்கள் தேச பக்தியை நிரூபிக்கும்படி கேட்க வேண்டிய அவசியமில்லை என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு காங்கிரஸ் பதிலடி  கொடுத்துள்ளது.

வடக்கு அசாமில் உள்ள உடல்குரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை, உங்கள் வீடுகளில் மூவர்ண  கொடியை (தேசியக் கொடி) ஏற்றவும். நீங்கள் இந்திய குடிமக்கள் என்று சொல்ல என்.ஆர்.சி.க்கு விண்ணப்பிப்பது போதாது. நீங்கள் பாரத மாதாவின் உண்மையான குழந்தைகள் என்பதற்கு மூவர்ணக் கொடியை ஏந்தி சான்று கொடுக்க வேண்டும் , இல்லையா? என்று பேசியிருந்தார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

தேச பக்தியை நிரூபிக்க வீடுகளில் தேசிய கொடி ஏற்றுங்க என்று அசாம் முதல்வர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் எம்.பி. நசீர் உசேன் கூறுகையில், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு தேச பக்தர்.  மக்கள் தங்கள் தேச பக்தியை நிரூபிக்கும்படி கேட்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

தேசியக் கொடி

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபுர்பா பட்டாச்சார்ஜி கூறுகையில், எங்களுக்கு தேச பக்தியை யார் கற்பிக்கிறார்கள் என்று பாருங்கள். சுதந்திர தினத்தை எப்படி கொண்டாடுவது என்று காட்டுவோம். பல ஆண்டுகளாக அவர்கள் தேசிய கொடியை கூட ஏற்றவில்லை. என்.ஆர்.சி. மற்றும் தேசிய கொடியை ஒப்பிடுவது தவறு என தெரிவித்தார்.