ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணிக்குள் விரிசல்.. காங்கிரஸ் அமைச்சர்களை டெல்லிக்கு வரும்படி உத்தரவிட்ட தலைமை
பொது குறைந்தபட்ச திட்டம் தொடர்பான வரைவு குறித்து முதல்வர் ஹேமந்த் சோரனிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்பதால், இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் அமைச்சர்களை டெல்லிக்கு வரும் படி அந்த கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் 7ம் தேதியன்று, மாநிலத்தில் செயல்படுத்த பொது குறைந்தபட்ச திட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது தொடர்பான வரைவு திட்டத்தை முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கொடுத்தது.
ஆனால் சுமார் ஒரு மாதம் ஆகியும் ஹேமந்த் சோரனிடமிருந்து எந்தவித பதிலும் காங்கிரஸூக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்க, காங்கிரஸ் தலைமை தனது அமைச்சர்கள் உள்பட அம்மாநிலத்தின் தலைவர்கள் 30 பேரை இன்று டெல்லி வரும்படி அழைப்புவிடுத்துள்ளது. இதனால் ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே கூறுகையில், அவர் (ஹேமந்த் சோரன்) மிகவும் தீவிரமாக இருப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல முக்கிய நிகழ்வுகள் காரணமாக அவரால் இந்த திட்டத்துக்காக அதிக நேரம் ஒதுக்கமுடியவில்லை. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி அரசாங்கத்தை நடத்துவதில் அதிக அனுபவம் வாய்ந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்காக சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டுள்ளது. அதுதான் ஜே.எம்.எம். மற்றும் அதன் தலைவர்களை எங்கள் கருத்துக்கள் மற்றும் பார்வையுடன் ஆதரிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.