அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் நாடு ரத்த வெள்ளத்தில் மூழ்கும்... காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச்சரிக்கை

 
இர்பான் அன்சாரி

அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் நாடு ரத்த வெள்ளத்தில் மூழ்கும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி எச்சரிக்கை செய்துள்ளார்.

மத்திய அரசு அண்மையில் ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள்: பணியில்  இருந்து விடுவிக்கப்படுவர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

அக்னிபாத் திட்டம்

இந்த சூழ்நிலையில், அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் நாடு ரத்த வெள்ளத்தில் மூழ்கும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி கூறியதாவது: நான்கு ஆண்டு பயிற்சிக்கு பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? இளைஞர்கள் துப்பாக்கி வைத்திருப்பார்கள். நாட்டில் ரத்தக்களரி ஏற்படும். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் நாடு ரத்த வெள்ளத்தில் மூழ்கும். பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளாக எந்த வேலையும் வழங்கவில்லை. 

மோடி

ஆனால் இன்று நீங்கள் நாட்டின் ராணுவத்தை விற்க போகிறீர்கள். இன்று நாட்டின் இளைஞர்கள் மத்தியில் கோபம் உள்ளது. அவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். எனவே எந்த விலையிலும் அக்னிபாத் திட்டத்தை நடக்க விட மாட்டோம். நாடு ரத்த வெள்ளத்தில் மூழ்கும் ஆனால் அக்னிபாத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.