இமாச்சல பிரதேச முதல்வருக்கான போட்டியில் 3 பெரும் தலைகள்... காங்கிரஸ் தலைமைக்கு புதிய சவால்

 
காங்கிரஸ்

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் முதல்வருக்கான போட்டியில் அந்த கட்சியின் 3 பெரிய தலைவர்கள் இருப்பதால் யாரை தேர்வு செய்வது என்பது காங்கிரஸ் தலைமைக்கு பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் அதிகபட்சமாக 40 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் இது ஆட்சியமைக்க தேவையானதை காட்டிலும் 5 இடங்கள் அதிகமாகும். ஆளும் கட்சியான பா.ஜ.க. 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரஸிடம் இழந்தது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கு தற்போது  யாரை முதல்வராக தேர்வு செய்வது என்ற பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

பிரதிபா சிங்

இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவருமான மறைந்த வீர்பத்ர சிங்கின் மனைவியும், அம்மாநில காங்கிரஸ் தலைவியுமான பிரதிபா சிங், சட்டப்பேரவையின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சுக்விந்தர் சுகு மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகிய 3 முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இந்த மூன்று பேருமே செல்வாக்கு மிக்க தலைவர்கள் என்பதால் யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்த சூழ்நிலையில், தனது தாயார் பிரதீபா சிங் முதல்வராக வரவேண்டும் என்று தான் விருப்பப்படுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விக்ரம்தித்யா சிங் என்று முதல் பந்தை போட்டுள்ளார்.

விக்ரம்தித்யா சிங்

இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சிம்லா கிராமப்புற சட்டப்பேரவை தொகுதியை தக்கவைத்துக் கொண்ட விக்ரம்தித்யா சிங் கூறியதாவது: ஒரு மகனாக, பிரதீபா ஜிக்கு பெரிய பொறுப்பு (முதல்வர் பதவி) கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். மகன் மட்டுமின்றி, கட்சிக்கு பொறுப்பான தலைவராகவும் இருக்கிறேன். கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதை மதிப்போம். மக்கள் விரும்புவதை கட்சி கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். வீர்பத்ர ஜி காட்டிய பாதையில் நாம் நடக்க வேண்டும். வீர்பத்ர சிங் வளர்ச்சி மாதிரியில் அரசாங்கம் செயல்படும். அவர் இன்று சொர்க்கத்தில் சிரித்து கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.