கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு... திமுக எம்.பியை சாடும் காங்கிரஸ் நிர்வாகி
இந்து அல்லாத மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் பட்டியல் இனத்தவருக்கான தனித் தொகுதிகளில் போட்டியிட முடியாது என்பதால் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்று ஆ.ராசாவை காங்கிரஸ் நிர்வாகி சொல்லி இருப்பதால் சர்ச்சை வெடித்திருக்கிறது. ஆராசாவை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் நிர்வாகி அமெரிக்கை வி நாராயணன்சொல்லி இருப்பதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது.
திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா, இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடி நாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும் திமுகவும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று சென்னையில் நடந்த விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை வி.நாராயணன், இந்துக்களை, இழிவாகப் பேசும் மாற்று மதத்தை சேர்ந்த ஆ.ராசா போன்றோரின், பிரிவினைவாத பேச்சை காஸ்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி உள்பட அனைவரும், உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். மதத்தின் பெயரால் ராசாவை முதல்வர் ஸ்டாலின் கைது செய்ய வேண்டுகிறேன் என்று வலியுறுத்தி இருக்கிறார் அமெரிக்கை வி.நாராயணன்.
இப்படி தனக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால், சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்? என்று கேட்டிருந்தார் ஆ.ராசா.
இதற்கு அமெரிக்கை வி.நாராயணன், ‘’கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும். காந்தி/அம்பேத்கர் தலைமையில் இந்தியா முழுவதும் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவை முன் நின்று செய்தவர்கள் காங்கிரசார். தமிழகத்தில் நடத்தியவர் தமிழ்நாடு காங்கிரஸ் வைத்தியநாத ஐயர்’’என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சுக்கு காங்கிரஸ் நிர்வாகி கடும் கண்டனம் தெரிவித்திருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.