சி.ஐ.எஸ்.எஃப். பணியிடங்கள் நீக்கம்.. விமான நிலைய பாதுகாப்பில் மோடி அரசு விளையாடுகிறது.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
விமான நிலைய பணியில் சி.ஐ.எஸ்.எஃப்.  வீரர்கள்

விமான நிலையங்களில் சி.ஐ.எஸ்.எஃப். பணியிடங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, விமான நிலைய பாதுகாப்பில் மோடி அரசு விளையாடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நாடு முழுவதுமாக உள்ள விமான நிலையங்களில் மொத்தம் 3,049 மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்.) பணியிடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. விமான நிலையங்களில் பல முக்கியமற்ற பணிகளுக்கு ஆயுதம் ஏந்திய சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் தேவையில்லை என்பதால் சி.ஐ.எஸ்.எஃப். பணியிடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளதாக  தகவல். சி.ஐ.எஸ்.எஃப். பணியிடங்கள் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு

விமான நிலையங்களில் நீக்கப்பட்ட சி.ஐ.எஸ்.எஃப்.  பணியிடங்களில், சி.ஐ.எஸ்.எஃப்.  வீரர்கள் செய்த பணிகளை தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள், கண்காணிப்பு கேமராக்கள், பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் ஸ்கேனர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். நீக்கப்பட்ட சி.ஐ.எஸ்.எஃப். பணியிடங்களில், 1,924 பணியிடங்கள் தனியார் பாதுகாவலர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளது. எஞ்சிய 1,125 பணியிடங்களில் இருந்தவர்கள் கூடுதல் வீரர்கள் தேவைப்படும் விமான நிலையங்களில் பணியமர்த்தப்படுவர் என தகவல்.

காங்கிரஸ்

காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், விமான நிலையங்களில் பாதுகாப்புடன் விளையாடி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப். பணியிடங்களை மோடி  அரசு ரத்து செய்துள்ளது. அவர்களுக்கு பதிலாக தனியார் பாதுகாவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு செலவுகளை குறைப்பது என்ற பெயரில் நடக்கும் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று பதிவு செய்துள்ளது.