குஜராத் காங்கிரஸூக்கு பெரிய அடி.. கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர் மோகன்சிங் ரத்வா.. பா.ஜ.க.வில் ஐக்கியம்

 
மோகன்சிங் ரத்வா (நடுவில்)

குஜராத் காங்கிரஸின் மூத்த எம்.எல்.ஏ. மோகன்சிங் ரத்வா நேற்று கட்சி உறுப்பினர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோகன்சிங் ரத்வா. இவர் பழங்குடி சமூகத்தின் முக்கிய தலைவர். மேலும் 11 முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.வான மோகன்சிங் ரத்வா எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்தார். அதேசமயம் தனது தொகுதியில் தனக்கு பதிலாக தனது மகனுக்கு சீட் கொடுக்கும்படி கட்சியிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதேவேளையில், காங்கிரஸ் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. நரன் ரத்வாவும் அதே தொகுதியில் தனது மகனுக்க சீட் கேட்டுள்ளதாக தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 

காங்கிரஸ்

இந்நிலையில், மோகன்சிங் ரத்வா நேற்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மோகன்சிங் ரத்வா தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூருக்கு அனுப்பினார். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள சூழலில், மோகன்சிங் ரத்வா கட்சியிலிருந்து விலகியது காங்கிரஸ் கட்சிக்கு  பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மோகன்சிங் ரத்வா நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

மோடி

பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மோகன் சிங் ரத்வா பேசுகையில், நான் டிக்கெட் கேட்கவில்லை. எனக்கு இப்போது வயதாகிறது. என் மகன் ராஜேந்திர சஙி இன்ஜினியர். அவர் பி.இ. சிவில் பட்டதாரி. நாங்கள் பா.ஜ.க.வில்  சேர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. பா.ஜ.க. எனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட்  வழங்கும் என்று 100 சதவீதம் நம்புகிறேன். என் மகனுக்கு சீட்டு கொடுக்க மாட்டோம் என்று காங்கிரஸ் ஒருபோதும் சொல்லவில்லை. காங்கிரஸ் இதை பற்றி எதுவும் கூறுவதற்கு முன்பே நான் முடிவு செய்தேன். நமது பழங்குடி பகுதிகளில் பா.ஜ.க. அரசும், பிரதமர் மோடியும் செய்த பணிகள் என்னை கவர்ந்தன. அதனால்தான் நான் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.