நம் நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டு நாடாளுமன்றங்களில்தான் மோடி அதிகம் பேசியுள்ளார்.. சசி தரூர் கிண்டல்

 
மோடி

இந்திய நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டு நாடாளுமன்றங்களில்தான் நமது பிரதமர் நரேந்திர மோடி அதிக உரைகளை நிகழ்த்தியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கிண்டலாக தாக்கினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை எம்.பி.யுமான சசி தரூர் டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது, நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பணி முறையை ஒப்பிட்டு பேசினார். மேலும் பிரதமர் மோடி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சரியாக கலந்து கொள்ளாததையும் மறைமுகமாக தாக்கினார்.

சசி தரூர்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியதாவது: இந்திய நாடாளுமன்றத்தை விட வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் நமது பிரதமர் நரேந்திர மோடி அதிக உரைகளை நிகழ்த்தியுள்ளார். இது முன்னாள் பிரதமர் நேருவுக்கு நேர்மாறானது. 1962ல் சீனாவுடன் இந்தியா போரில் ஈடுபட்டபோது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தை கூட்டி, பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். 

மோடி, நேரு

ஆனால் இன்று சீனாவில் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லை. 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த போதிலும், இந்தியா மற்றும் சீன பிரச்சினைகள் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்த விவாதமும் இல்லை. இவ்வாறு  அவர் தெரிவித்தார்.