என் வாழ்நாளில் 40 ஆண்டுகளை நான் இந்த கட்சிக்கு கொடுத்துள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி
என் வாழ்நாளில் 40 ஆண்டுகளை நான் இந்த கட்சிக்கு (காங்கிரஸ்) கொடுத்துள்ளேன் என காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு புதிய, எழுச்சிமிக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் முழு நேர தலைமை தேவை என்று மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அந்த தலைவர்களில் மணிஷ் திவாரியும் ஒருவர். சமீபகாலமாக மணிஷ் திவாரி கட்சிக்குள் ஓரம் கட்டப்படுவதாக தெரிகிறது. அண்மையில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸின் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் மணிஷ் திவாரியின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் மணிஷ் திவாரி காங்கிரஸிலிருந்து விலக போவதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவல் குறித்து மணிஷ் திவாரி தனது மவுனத்தை கலைத்துள்ளார். மணிஷ் திவாரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் குத்தகைதாரர்கள் அல்ல. காங்கிரஸின் இணை உரிமையாளர்கள். யாராவது என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற விரும்பினால் அது வேறு விஷயம்.
என்னை பொறுத்தவரை என் வாழ்நாளில் 40 ஆண்டுகளை நான் இந்த கட்சிக்கு (காங்கிரஸ்) கொடுத்துள்ளேன். எங்கள் குடும்பம் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டிற்காக போராடியது. நாங்கள் பிரதிபலிப்பு அரசியலை நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன், வெறுமனே மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரையும் சர்தாராக ஆக்கி விட என பிரியங்கா காந்தி மோடியையும், கெஜ்ரிவாலையும் பிரியங்கா காந்தி மறைமுகமாக விமர்சனம் செய்து இருந்தார். இது குறித்து மணிஷ் திவாரி, தலைப்பாகை (டர்பன்) பஞ்சாபின் பெருமை, அதை அணிவதில் அரசியல் கூடாது என்று தெரிவித்தார்.