வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாமுக்கு சென்று பார்வையிடாமல் மகாராஷ்டிரா அரசை கவிழ்ப்பதில் மோடி மும்முரம்.. காங்கிரஸ்

 
மோடி

பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு சென்று பார்வையிட்டு, சிறப்பு நிதி அறிவிக்க வேண்டும் ஆனால் அவர் மகாராஷ்டிரா அரசை கவிழ்ப்பதில் மும்முரமாக இருக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர்,  போலீசாரும் இணைந்து  மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.  அசாமில் 32 மாவட்டங்களில் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் தத்தளிக்கும் அசாம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட வேண்டும், அந்த மாநிலத்துக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதனை செய்யாமல் மகாராஷ்டிராவில் அரசை கவிழ்ப்பதில் மோடி தீவிரமாக உள்ளார் என காங்கிஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கவுரவ் கோகோய்

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறியதாவது: நெருக்கடி என்றால் அது வெள்ளம்தான், ஆனால் பா.ஜ.க. அதிகாரத்திற்காக பாராமுகமாகி விட்டது. அசாமில் வெள்ளம் உள்ளது, பிரதமர் (நரேந்திர மோடி) அந்த மாநிலத்துக்கு செல்ல வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாமுக்கு சிறப்பு நிதியை அறிவிக்க வேண்டும். ஆனால் அவர் (மோடி) மகாராஷ்டிரா அரசை கவிழ்ப்பதில் மும்முரமாக இருக்கிறார் அல்லது குஜராத் தேர்தலில் பிஸியாக இருக்கிறார்  பா.ஜ.க.வுக்கு அதிகாரம் மட்டுமே எல்லாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.