தங்களது அடுத்த நடவடிக்கை குறித்து காங்கிரஸின் ஜி23 தலைவர்கள் இன்று மீண்டும் சந்திப்பு..

 
குலாம் நபி ஆசாத்

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததையடுத்து, தங்களது அடுத்த நடவடிக்கை குறித்து காங்கிரஸின் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜி23 தலைவர்கள் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.

காங்கிரஸ் மறுமலர்ச்சிக்கு கட்சிக்கு முழு நேர தலைவர் அவசியம் மற்றும் மீண்டும் கட்சியின் அனைத்து அமைப்புக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜிதின் பிரசாதா, கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத் உள்பட அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது அந்த கட்சிக்குள் பெரிய பிரளயத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கட்சி தலைவர் பதவி உள்ளிட்டவைக்கு தேர்தல் நடத்தப்படும் என கூறப்பட்டது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சியில் ஜி23 தலைவர்கள் ஒரங்கப்பட்டனர். 

காங்கிரஸ்

இந்த சூழ்நிலையில், உத்தர பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கபில் சிபல் உள்ளிட்ட ஜி23 தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று குலாம் நபி ஆசாத் வீட்டில் கூடி காங்கிரஸின் தேர்தல் தோல்வி குறித்து விவாதித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே, ஜி23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தின் வீட்டில் தங்களது கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கபில் சிபல்

தற்போது காங்கிரஸின் ஜி23 தலைவர்கள் இன்று மீண்டும் சந்தித்து தங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகவும், ஆனால் சந்திப்பிற்கான இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தகவல். இந்த கூட்டத்தில் ஜி23 தலைவர்களுடன், அந்த கட்சியை சேர்ந்த பல தலைவர்களும் கலந்து கொள்ளுவர் என கூறப்படுகிறது. குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தனியாக கூட்டம் நடத்துவது, காங்கிரஸ் கட்சிக்கும் உள்கட்சி பூசல் நிலவுவதை வெளிப்படையாக வெளிப்படுத்துவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.