கட்சியின் எதிர்ப்பை மீறி சி.பி.எம். மாநாட்டில் கலந்து கொண்ட கே.வி. தாமஸூக்கு நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ்

 
காங்கிரஸ்

கட்சியின் எதிர்ப்பை மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட அந்த கட்சியின் மூத்த தலைவர் கே.வி. தாமஸூக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸின் ஒழுக்க குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது கட்சி மாநாட்டை கண்ணூரில் கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது.  இந்த மாநாட்டில் நடைபெற்ற மாநில-மத்திய உறவு குறித்த கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தாமஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள கூடாது என்று கே.வி.தாமஸை எச்சரிக்கை செய்து இருந்தது. ஆனால் அதனையும் மீறி கே.வி. தாமஸ் அதில் கொண்டார்.

கே.வி. தாமஸ்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை எஸ்.சி. தலைவராக குறிவைத்து பஞ்சாப் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாக்கர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த 2 தலைவர்களும் எதிராக நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸின் தலைமைக்கு அந்த மாநிலங்களை சேர்ந்த கட்சியினர் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனையடுத்து நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் ஒழுங்குமுறை குழு கூட்டம் நடைபெற்றது.

சுனில் ஜாக்கர்

இந்த கமிட்டி கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களான தாரிக் அன்வர், ஜே.பி. அகர்வால் மற்றும் அம்பிகா சோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பிறகு தாரிக் அன்வர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் இரு தலைவருக்கும் (கே.வி. தாமஸ் மற்றும் சுனில் ஜாகர்) தலைவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புகிறோம். மேலும் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலின்போது சுனில் ஜாக்கரின் அறிக்கைகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.